الذاريات

تفسير سورة الذاريات

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالذَّارِيَاتِ ذَرْوًا﴾

1. (கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,

﴿فَالْحَامِلَاتِ وِقْرًا﴾

2. (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,

﴿فَالْجَارِيَاتِ يُسْرًا﴾

3. (பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,

﴿فَالْمُقَسِّمَاتِ أَمْرًا﴾

4. அதை (பூமியின் பல பாகங்களில்) மழையாக பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக!

﴿إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ﴾

5. (செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.

﴿وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ﴾

6. நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.

﴿وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ﴾

7. (நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!

﴿إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُخْتَلِفٍ﴾

8. நிச்சயமாக நீங்கள் (சத்தியத்திற்கு) முரணாகப் பேசுவதில்தான் நிலைத்து விட்டீர்கள்.

﴿يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ﴾

9. (ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி) திருப்பப்பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்.

﴿قُتِلَ الْخَرَّاصُونَ﴾

10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்.

﴿الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ﴾

11. அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்.

﴿يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ﴾

12. அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.

﴿يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ﴾

13. அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.

﴿ذُوقُوا فِتْنَتَكُمْ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ﴾

14. (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்'' (என்றும் கூறப்படும்).

﴿إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ﴾

15. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள்.

﴿آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ﴾

16. அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள்.

﴿كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ﴾

17. அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்பவர்களாக இருந்தனர்.

﴿وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ﴾

18. அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள்.

﴿وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ﴾

19. அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் செய்வார்கள்.)

﴿وَفِي الْأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ﴾

20. உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

﴿وَفِي أَنْفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ﴾

21. உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?

﴿وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ﴾

22. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் உங்கள் உணவும் வானத்தில் தான் இருக்கின்றன.

﴿فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنَّكُمْ تَنْطِقُونَ﴾

23.
வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது, (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தான் கூறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப் போல் (இந்த குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்.

﴿هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ﴾

24. (நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா?

﴿إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ﴾

25. அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள்.
அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்.)

﴿فَرَاغَ إِلَىٰ أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ﴾

26. பிறகு, விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டுவந்தார்.

﴿فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ﴾

27. அதை அவர்கள் முன் வைத்தார். (ஆனால், அதை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் புசிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்.

﴿فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۖ قَالُوا لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ﴾

28. (இருப்பினும், அவர்கள் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர், அவர்களைப் பற்றி பயந்தார்.
(இதை அறிந்த அவர்கள் ‘‘இப்ராஹீமே!) பயப்படாதீர்'' என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.

﴿فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ﴾

29.
(இதைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்துகொண்டு ‘‘(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)'' என்று கூறினார்.

﴿قَالُوا كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ﴾

30. அதற்கவர்கள், ‘‘இவ்வாறே, உமது இறைவன் கூறுகிறான். நிச்சயமாக அவன்தான் மிக ஞானமுள்ளவன், அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்'' என்றார்கள்.

﴿۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ﴾

31.
(பின்னர் இப்ராஹீம் வானவர்களை நோக்கி) ‘‘தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)'' என்று கேட்டார்.

﴿قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُجْرِمِينَ﴾

32.
அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றவாளிகளான (லூத் நபியின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினர்.

﴿لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِنْ طِينٍ﴾

33. ‘‘நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).''

﴿مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ﴾

34. ‘‘(அவை) உமது இறைவனிடம் வரம்பு மீறியவர்களுக்கென (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவையாகும்.''

﴿فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ﴾

35.
ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம்.

﴿فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ﴾

36. எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை.

﴿وَتَرَكْنَا فِيهَا آيَةً لِلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ﴾

37. துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம்.

﴿وَفِي مُوسَىٰ إِذْ أَرْسَلْنَاهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُبِينٍ﴾

38. மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கிறது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில்,

﴿فَتَوَلَّىٰ بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ﴾

39.
அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, ‘‘இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்'' என்று கூறினான்.

﴿فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ﴾

40. ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான்.

﴿وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ﴾

41. ‘ஆது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). அவர்கள் மீது நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,

﴿مَا تَذَرُ مِنْ شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيمِ﴾

42. அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை.

﴿وَفِي ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا حَتَّىٰ حِينٍ﴾

43. ‘ஸமூது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). ‘‘நீங்கள் ஒரு காலம் வரை சுகமாக வாழ்ந்திருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,

﴿فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنْظُرُونَ﴾

44. அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள்.
ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.

﴿فَمَا اسْتَطَاعُوا مِنْ قِيَامٍ وَمَا كَانُوا مُنْتَصِرِينَ﴾

45. ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்தவாறே அழிந்து விட்டனர்.)

﴿وَقَوْمَ نُوحٍ مِنْ قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ﴾

46. இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்.

﴿وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ﴾

47. (எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்.

﴿وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ﴾

48. பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.

﴿وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ﴾

49. ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். (இதைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!

﴿فَفِرُّوا إِلَى اللَّهِ ۖ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ﴾

50. ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.

﴿وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۖ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ﴾

51. அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஆக்காதீர்கள்.
நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு (இதைப் பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கிறேன்.

﴿كَذَٰلِكَ مَا أَتَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ﴾

52.
இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை.

﴿أَتَوَاصَوْا بِهِ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ﴾

53.
(இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.

﴿فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ﴾

54. (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீர் நிந்திக்கப்பட மாட்டீர்.

﴿وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنْفَعُ الْمُؤْمِنِينَ﴾

55. (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.

﴿وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ﴾

56.
ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.

﴿مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ﴾

57. அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,)

﴿إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ﴾

58.
(நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்.

﴿فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ﴾

59.
இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கு இருந்த (நன்மை, தீமையை அளக்கக்கூடிய) அளவுப் படிகளைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப் படிகளுண்டு. (அவை நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், அவர்கள் அவசரப்பட வேண்டாம்.

﴿فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ﴾

60. (விசாரணைக்காக பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான்.

الترجمات والتفاسير لهذه السورة: