ق

تفسير سورة ق

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ﴾

1. காஃப். (நபியே!) மிக்க மேலான இந்த குர்ஆன் மீது சத்தியமாக! (நீர் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்).

﴿بَلْ عَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَٰذَا شَيْءٌ عَجِيبٌ﴾

2.
ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, இந்நிராகரிப்பவர்கள் ‘‘இது மிக அற்புதமான விஷயமென்று'' கூறுகின்றனர்.

﴿أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۖ ذَٰلِكَ رَجْعٌ بَعِيدٌ﴾

3.
(மேலும், ‘‘இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீட்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு தூரம். (அது நிகழப்போவதில்லை'' என்றும் கூறுகின்றனர்.)

﴿قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ﴾

4. (மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடுவோம்.) மேலும், (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கிறது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.)

﴿بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ﴾

5.
இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர்.

﴿أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ﴾

6.
தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கிறோம். அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லை. (ஓட்டை உடைசலும் இல்லை!)

﴿وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ﴾

7.
மேலும், நாமே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம்.

﴿تَبْصِرَةً وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ﴾

8.
(இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கிறது).

﴿وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ﴾

9.
மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதைக்கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கிறோம்.

﴿وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ﴾

10.
அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்தோம்).

﴿رِزْقًا لِلْعِبَادِ ۖ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا ۚ كَذَٰلِكَ الْخُرُوجُ﴾

11. அதை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும்.

﴿كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَابُ الرَّسِّ وَثَمُودُ﴾

12.
(இவற்றையெல்லாம்) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ரஸ்ஸு (அகழு)டைய மக்களும், ஸமூத் என்னும் மக்களும் பொய்யாக்கினர்.

﴿وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَانُ لُوطٍ﴾

13. ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்).

﴿وَأَصْحَابُ الْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ۚ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدِ﴾

14. மேலும், தோப்பில் வசித்தவர்களும், ‘துப்பஉ' என்னும் மக்களும் (பொய்யாக்கினர்). இவர்கள் ஒவ்வொருவரும் (எனது) தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழிப்போமென்ற) எனது வாக்கு பூர்த்தியாயிற்று.

﴿أَفَعَيِينَا بِالْخَلْقِ الْأَوَّلِ ۚ بَلْ هُمْ فِي لَبْسٍ مِنْ خَلْقٍ جَدِيدٍ﴾

15.
(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா? (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குச் சிரமமெனக் கூறுவதற்கு!) எனினும், (மீண்டும் இவர்களை) புதிதாகப் படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர்.

﴿وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ﴾

16. நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கிறோம்.

﴿إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ﴾

17.
வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾

18. (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.)

﴿وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ﴾

19.
மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்.)

﴿وَنُفِخَ فِي الصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ الْوَعِيدِ﴾

20.
எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி ‘‘உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)'' என்று கூறப்படும்.

﴿وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ﴾

21. (அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார்.

﴿لَقَدْ كُنْتَ فِي غَفْلَةٍ مِنْ هَٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ﴾

22. அவனை நோக்கி, ‘‘நிச்சயமாக நீ இதைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னை விட்டும் நாம் நீக்கி விட்டோம். இன்றைய தினம் உன் பார்வை கூர்மையாயிருக்கிறது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்ததை உன் கண் திறந்து பார்'' என்று கூறப்படும்.)

﴿وَقَالَ قَرِينُهُ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ﴾

23.
(சாட்சி கூற) அவனுடன் வந்தவர் ‘‘இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராக) இருக்கிறது'' என்று கூறுவார்.

﴿أَلْقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ﴾

24.
(உடனே இரு காவலர்களை நோக்கி) ‘‘நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தானையும்) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்'' (என்று கூறப்படும்).

﴿مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ مُرِيبٍ﴾

25.
(‘‘அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக்கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக்கொண்டுமிருந்தான்'' என்றும்,

﴿الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ﴾

26.
‘‘இவன் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்'' (என்றும் கூறப்படும்).

﴿۞ قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَٰكِنْ كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ﴾

27.
(அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்'' என்று கூறுவான்.

﴿قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُمْ بِالْوَعِيدِ﴾

28. (ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) ‘‘என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்.

﴿مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِلْعَبِيدِ﴾

29. என் கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல'' என்றும் கூறுவான்.

﴿يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ﴾

30. அந்நாளில் நரகத்தை நோக்கி, ‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று நாம் கேட்போம். அதற்கு அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும்.

﴿وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ﴾

31. (அந்நாளில்) இறையச்சமுடையவர்களுக்கு சொர்க்கம் மிக்க சமீபமாகக் கொண்டு வரப்படும்.

﴿هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ﴾

32.
‘‘இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது'' (என்றும்,) ‘‘எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்'' (என்றும்,)

﴿مَنْ خَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ﴾

33. எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகிறார்களோ...

﴿ادْخُلُوهَا بِسَلَامٍ ۖ ذَٰلِكَ يَوْمُ الْخُلُودِ﴾

34. (அவர்களை நோக்கி,) ‘‘ஈடேற்றம் பெற்று நீங்கள் இதில் நுழைந்து விடுங்கள். இது நிரந்தரமான நாளாகும்'' (என்றும் கூறப்படும்).

﴿لَهُمْ مَا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ﴾

35. அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும், நம்மிடமிருந்து (அவர்கள் கேட்காததும் இன்னும்) அதிகமாகக் கொடுக்கப்படும்.

﴿وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ﴾

36. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அப்போது அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (இல்லை, கிடைக்காமல் அழிந்து விட்டனர்.)

﴿إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ﴾

37.
எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கிறது.

﴿وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ﴾

38. நிச்சயமாக நாம்தான் வானங்களையும், பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாட்களில் படைத்தோம். அதனால் நமக்கு ஒரு களைப்பும் (சோர்வும்) ஏற்பட்டு விடவில்லை.

﴿فَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ﴾

39.
(நபியே!) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்;) நீர் பொறுமையாக அதைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துவருவீராக!

﴿وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ﴾

40. இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக!

﴿وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَكَانٍ قَرِيبٍ﴾

41. (நபியே!) நீர் செவிமடுத்துக் கேட்பீராக.
(சமாதிகளுக்கு) சமீபமான இடத்திலிருந்து (கொண்டு ‘‘மரணித்தவர்களே! எழும்புங்கள்'' என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில்,

﴿يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ۚ ذَٰلِكَ يَوْمُ الْخُرُوجِ﴾

42. (வானவர்கள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் அந்நாளில் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள்.

﴿إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ﴾

43.
நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கிறோம்; நாம்தான் மரணிக்கச் செய்கிறோம்; நம்மிடமே அனைவரும் வரவேண்டியதிருக்கிறது.

﴿يَوْمَ تَشَقَّقُ الْأَرْضُ عَنْهُمْ سِرَاعًا ۚ ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌ﴾

44.
(மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டு விலகும் நாளை (நினைவு கூருவீராக). அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே.

﴿نَحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ ۖ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ ۖ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ﴾

45. (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் பயப்படுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!

الترجمات والتفاسير لهذه السورة: