يس

تفسير سورة يس

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يس﴾

1. யா ஸீன்.

﴿وَالْقُرْآنِ الْحَكِيمِ﴾

2. முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!

﴿إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ﴾

3. (நபியே!) நிச்சயமாக நீர் (நமது) தூதர்களில் ஒருவர்தான்.

﴿عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ﴾

4. (நீர்) நேரான வழியில் இருக்கிறீர்.

﴿تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ﴾

5. (இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது.

﴿لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ﴾

6.
(உமது) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (ஒரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும்) கவலையற்று இருக்கின்றனர். ஆகவே, இவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.

﴿لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ﴾

7.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள்தான் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக உறுதியாகி விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

﴿إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْمَحُونَ﴾

8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரை விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன.

﴿وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ﴾

9. அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது.

﴿وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ﴾

10.
அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

﴿إِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ ۖ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ﴾

11.
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக.

﴿إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ﴾

12. நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்.

﴿وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ﴾

13. (நபியே!) நம் தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக.

﴿إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ﴾

14. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம்.
ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்.

﴿قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَمَا أَنْزَلَ الرَّحْمَٰنُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا تَكْذِبُونَ﴾

15. அதற்கவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.

﴿قَالُوا رَبُّنَا يَعْلَمُ إِنَّا إِلَيْكُمْ لَمُرْسَلُونَ﴾

16.
அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்,

﴿وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ﴾

17.
“எங்கள் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமையல்ல'' (என்றும் கூறினார்கள்.)

﴿قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ ۖ لَئِنْ لَمْ تَنْتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ﴾

18. அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம்.
மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்.

﴿قَالُوا طَائِرُكُمْ مَعَكُمْ ۚ أَئِنْ ذُكِّرْتُمْ ۚ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ﴾

19. அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்.

﴿وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ﴾

20.
இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக் கோடியிலிருந்து ‘(ஹபீபுந் நஜ்ஜார்' என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: “என் மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.

﴿اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ﴾

21. உங்களிடம் ஒரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி அடைந்தவர்கள்.

﴿وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ﴾

22.
என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.''

﴿أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَٰنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنْقِذُونِ﴾

23.
அவனையன்றி, (மற்ற எதையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு எதையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது.

﴿إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ﴾

24. (அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்.

﴿إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ﴾

25. நிச்சயமாக நான் உங்கள் இறைவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அல்ல.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்'' (என்று கூறினார்).

﴿قِيلَ ادْخُلِ الْجَنَّةَ ۖ قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ﴾

26.
(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.

﴿بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ﴾

27.
(சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.

﴿۞ وَمَا أَنْزَلْنَا عَلَىٰ قَوْمِهِ مِنْ بَعْدِهِ مِنْ جُنْدٍ مِنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ﴾

28.
அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து ஒரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை.

﴿إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ﴾

29. ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள்.

﴿يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ ۚ مَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ﴾

30.
அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நமது தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை.

﴿أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ﴾

31.
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்து விட்டோம் என்பதையும் அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

﴿وَإِنْ كُلٌّ لَمَّا جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ﴾

32. அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.

﴿وَآيَةٌ لَهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ﴾

33. இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்.

﴿وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ﴾

34.
மேலும், அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கிறோம்.

﴿لِيَأْكُلُوا مِنْ ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ ۖ أَفَلَا يَشْكُرُونَ﴾

35.
இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமே தவிர) இவர்களுடைய கைகள் அதை செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

﴿سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ وَمِنْ أَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ﴾

36.
இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.

﴿وَآيَةٌ لَهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُمْ مُظْلِمُونَ﴾

37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள்.

﴿وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ﴾

38. தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்.

﴿وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ﴾

39.
(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.

﴿لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ﴾

40. சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

﴿وَآيَةٌ لَهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ﴾

41. கப்பல் நிறைய அவர்களுடைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.

﴿وَخَلَقْنَا لَهُمْ مِنْ مِثْلِهِ مَا يَرْكَبُونَ﴾

42. அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற)வற்றையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கிறோம்.

﴿وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقَذُونَ﴾

43. நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

﴿إِلَّا رَحْمَةً مِنَّا وَمَتَاعًا إِلَىٰ حِينٍ﴾

44.
எனினும் நமது கருணையினாலும் சிறிது காலம் (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்).

﴿وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ﴾

45.
“உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.
(அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).

﴿وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ﴾

46.
மேலும், அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்த போதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை.

﴿وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَنْ لَوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ﴾

47.
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.

﴿وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ﴾

48.
மேலும், மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) “தண்டனை எப்பொழுது வரும்?'' என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.

﴿مَا يَنْظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ﴾

49.
ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

﴿فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَىٰ أَهْلِهِمْ يَرْجِعُونَ﴾

50.
அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)

﴿وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنْسِلُونَ﴾

51.
(மறுமுறை) ‘ஸூர்' ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள்.

﴿قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا ۜ ۗ هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ﴾

52. ‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள்.
(அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்).

﴿إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ﴾

53.
அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டுவரப்பட்டு விடுவார்கள்.

﴿فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُونَ﴾

54. அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.

﴿إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ﴾

55. அந்நாளில் நிச்சயமாக சொர்க்கவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

﴿هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ﴾

56.
அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நிழல்களின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள்.

﴿لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُمْ مَا يَدَّعُونَ﴾

57. அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்.

﴿سَلَامٌ قَوْلًا مِنْ رَبٍّ رَحِيمٍ﴾

58. நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும்.

﴿وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ﴾

59.
(மற்ற பாவிகளை நோக்கி) “குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று கூறப்படும்).

﴿۞ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَنْ لَا تَعْبُدُوا الشَّيْطَانَ ۖ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ﴾

60.
‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

﴿وَأَنِ اعْبُدُونِي ۚ هَٰذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ﴾

61. இன்னும், நீங்கள் என்னையே வணங்கவேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?)

﴿وَلَقَدْ أَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيرًا ۖ أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ﴾

62. (அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

﴿هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ﴾

63. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.

﴿اصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ﴾

64.
இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்).

﴿الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ﴾

65. அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிடுவோம். அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.

﴿وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَىٰ أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ﴾

66. நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம்.
(அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்?

﴿وَلَوْ نَشَاءُ لَمَسَخْنَاهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوا مُضِيًّا وَلَا يَرْجِعُونَ﴾

67.
நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.

﴿وَمَنْ نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ ۖ أَفَلَا يَعْقِلُونَ﴾

68.
நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

﴿وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ﴾

69. (நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை.
அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை.

﴿لِيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ﴾

70.
உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்).

﴿أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ﴾

71.
நம் கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.

﴿وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ﴾

72. அவற்றை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம்.
அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன; (அறுத்து) புசிக்கக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன.

﴿وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ ۖ أَفَلَا يَشْكُرُونَ﴾

73. அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

﴿وَاتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنْصَرُونَ﴾

74.
எனினும், அல்லாஹ் அல்லாதவற்றாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவற்றை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!

﴿لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُحْضَرُونَ﴾

75. அவற்றால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவை இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.

﴿فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ إِنَّا نَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ﴾

76. (நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம்.
நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.

﴿أَوَلَمْ يَرَ الْإِنْسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ﴾

77.
மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகிறான்.

﴿وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ ۖ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ﴾

78.
(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான்.
அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்.

﴿قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ ۖ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ﴾

79. (நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.

﴿الَّذِي جَعَلَ لَكُمْ مِنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا فَإِذَا أَنْتُمْ مِنْهُ تُوقِدُونَ﴾

80. அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கிறீர்கள்.

﴿أَوَلَيْسَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ ۚ بَلَىٰ وَهُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ﴾

81.
வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் நன்கறிந்தவனும் ஆவான்.

﴿إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ﴾

82. அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது.

﴿فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ﴾

83. சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.

الترجمات والتفاسير لهذه السورة: