الإسراء

تفسير سورة الإسراء

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ﴾

1.
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.

﴿وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِنْ دُونِي وَكِيلًا﴾

2. நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்.
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.

﴿ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا﴾

3.
நூஹ்வுடன் நாம் கப்பலில் ஏற்றி பாதுகாத்தவர்களுடைய சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (ஆகவே, அவர்களின் வழித்தோன்றல்களாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.)

﴿وَقَضَيْنَا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا﴾

4.
இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம்.

﴿فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ ۚ وَكَانَ وَعْدًا مَفْعُولًا﴾

5.
அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக) நாம் படைத்த இரக்கமற்ற பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம்.
அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் அழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நமது முந்திய) வாக்குறுதி நிறை வேறியது.

﴿ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا﴾

6.
பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.

﴿إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا﴾

7. (அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர்.
ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.

﴿عَسَىٰ رَبُّكُمْ أَنْ يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدْتُمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ حَصِيرًا﴾

8. (நீங்கள் விஷமம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியலாம்.
(அப்படி இல்லாமல் உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கி விடுவோம்.

﴿إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا﴾

9.
நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.

﴿وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا﴾

10.
(உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி இருக்கிறோம் (என்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது).

﴿وَيَدْعُ الْإِنْسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ ۖ وَكَانَ الْإِنْسَانُ عَجُولًا﴾

11.
மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான்.

﴿وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا﴾

12. இரவையும் பகலையும் நாம் அத்தாட்சிகளாக ஆக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம்.
(பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் (இதன் மூலம்) நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்.

﴿وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا﴾

13. ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான்.

﴿اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا﴾

14. (அச்சமயம் அவனை நோக்கி) ‘‘இன்றைய தினம் உன் கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்'' (என்று கூறுவோம்.)

﴿مَنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ ۖ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا﴾

15. எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நமது) தூதர் ஒருவரை அனுப்பாத வரை நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.

﴿وَإِذَا أَرَدْنَا أَنْ نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا﴾

16.
ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நன்மையைக் கொண்டு நாம் ஏவுகிறோம். ஆனால், அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம் வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

﴿وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا﴾

17. நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை உற்று நோக்கி அறிந்து கொள்வதற்கு உமது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவையில்லை.)

﴿مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا﴾

18.
எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.

﴿وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا﴾

19.
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன.

﴿كُلًّا نُمِدُّ هَٰؤُلَاءِ وَهَٰؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ ۚ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا﴾

20.
(இம்மையை விரும்புகிற) அவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உமது இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உமது இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்பட்டதாக இல்லை.

﴿انْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ وَلَلْآخِرَةُ أَكْبَرُ دَرَجَاتٍ وَأَكْبَرُ تَفْضِيلًا﴾

21.
(நபியே!) அவர்களில் சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை கவனிப்பீராக! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் மிகப் பெரிது; சிறப்பிப்பதாலும் மிகப்பெரிது.

﴿لَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَخْذُولًا﴾

22. (நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்.

﴿۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا﴾

23.
(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்.
உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக.

﴿وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا﴾

24.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக!

﴿رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ ۚ إِنْ تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا﴾

25. உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.
நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கிறான்.

﴿وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا﴾

26. உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்.

﴿إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا﴾

27. ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக்கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கிறான்.

﴿وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا﴾

28.
(நபியே! உம்மிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீர் உமது இறைவனின் அருளை எதிர் பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும் படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுவீராக.

﴿وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا﴾

29.
(உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர்.

﴿إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا﴾

30.
நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான்.
ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)

﴿وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ ۖ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا﴾

31. (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.

﴿وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا﴾

32. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம்.ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.

﴿وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ۗ وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ ۖ إِنَّهُ كَانَ مَنْصُورًا﴾

33.
(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள்.
எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)

﴿وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُ ۚ وَأَوْفُوا بِالْعَهْدِ ۖ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا﴾

34.
(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலேயே தவிர அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.

﴿وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا﴾

35. நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.

﴿وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا﴾

36.
(நபியே!) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.

﴿وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا﴾

37. பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது.

﴿كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُ عِنْدَ رَبِّكَ مَكْرُوهًا﴾

38. இவை அனைத்தும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்.

﴿ذَٰلِكَ مِمَّا أَوْحَىٰ إِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ ۗ وَلَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتُلْقَىٰ فِي جَهَنَّمَ مَلُومًا مَدْحُورًا﴾

39. (நபியே!) இவை உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்ட ஞான (உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.

﴿أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا﴾

40.
(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, வானவர்களைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறுகின்ற) நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.

﴿وَلَقَدْ صَرَّفْنَا فِي هَٰذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا﴾

41.
இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையே தவிர அதிகப்படுத்தவில்லை.

﴿قُلْ لَوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَىٰ ذِي الْعَرْشِ سَبِيلًا﴾

42.
(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்.

﴿سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا﴾

43. அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுகின்ற கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன்.

﴿تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ ۚ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا﴾

44. ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.

﴿وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا﴾

45.
(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்.

﴿وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَىٰ أَدْبَارِهِمْ نُفُورًا﴾

46.
அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம்.
திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.

﴿نَحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰ إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا﴾

47. அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம்.
அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).

﴿انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا﴾

48. (நபியே!) உமக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக. இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது.

﴿وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا﴾

49.
‘‘நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.

﴿۞ قُلْ كُونُوا حِجَارَةً أَوْ حَدِيدًا﴾

50. (அதற்கு நபியே!) கூறுவீராக: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.

﴿أَوْ خَلْقًا مِمَّا يَكْبُرُ فِي صُدُورِكُمْ ۚ فَسَيَقُولُونَ مَنْ يُعِيدُنَا ۖ قُلِ الَّذِي فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰ أَنْ يَكُونَ قَرِيبًا﴾

51. அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் ‘‘எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?'' என்று அவர்கள் கேட்கட்டும்.
(அவ்வாறு கேட்டால் நபியே! அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்)?'' என்று கேட்பார்கள். அதற்கு (அவர்களை நோக்கி ‘‘அது தூரத்தில் இல்லை,) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்'' என்று கூறுவீராக.

﴿يَوْمَ يَدْعُوكُمْ فَتَسْتَجِيبُونَ بِحَمْدِهِ وَتَظُنُّونَ إِنْ لَبِثْتُمْ إِلَّا قَلِيلًا﴾

52.
(இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கின்ற நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்து கொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப(நேர)மே தவிர தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்!

﴿وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ الشَّيْطَانَ يَنْزَغُ بَيْنَهُمْ ۚ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنْسَانِ عَدُوًّا مُبِينًا﴾

53.
(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என் அடியார்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்.)

﴿رَبُّكُمْ أَعْلَمُ بِكُمْ ۖ إِنْ يَشَأْ يَرْحَمْكُمْ أَوْ إِنْ يَشَأْ يُعَذِّبْكُمْ ۚ وَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ وَكِيلًا﴾

54. (மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள்புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை.

﴿وَرَبُّكَ أَعْلَمُ بِمَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّينَ عَلَىٰ بَعْضٍ ۖ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا﴾

55. வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான்.
(நபியே! உமது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.

﴿قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيلًا﴾

56.
(நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் சிரமங்களை நீக்க) அழையுங்கள்.
(அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் சிரமத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதைத்) தட்டிவிடவோ சக்திபெறாது (என்பதை அறிந்து கொள்வீர்கள்).

﴿أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا﴾

57.
இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே!

﴿وَإِنْ مِنْ قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًا شَدِيدًا ۚ كَانَ ذَٰلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا﴾

58.
(அநியாயக்காரர்கள் வசிக்கின்ற) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்து விடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளி'ல் வரையப்பட்டு இருக்கிறது.

﴿وَمَا مَنَعَنَا أَنْ نُرْسِلَ بِالْآيَاتِ إِلَّا أَنْ كَذَّبَ بِهَا الْأَوَّلُونَ ۚ وَآتَيْنَا ثَمُودَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا بِهَا ۚ وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا﴾

59.
(இவர்களுக்கு) முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த) அத்தாட்சிகளை பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இப்போதுள்ளவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பிவைக்க வேறொன்றும் நமக்கு தடையாக இல்லை.
(இதற்கு முன்னர்) ‘ஸமூது' என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) அத்தாட்சிகளை (அவர்களைப்) பயமுறுத்துவதற்காகவே தவிர நாம் அனுப்புவதில்லை.

﴿وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ ۚ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ ۚ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا﴾

60. (நபியே!) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் கூறியதை கவனிப்பீராக.
உமக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவே தவிர வேறில்லை.
(நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களைப் பயமுறுத்துவது (அவர்களுடைய) பெரும் அட்டூழியத்தையே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது.

﴿وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا﴾

61.
வானவர்களை நோக்கி, ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?'' என்று கேட்டான்.

﴿قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا﴾

62.
(மேலும், இறைவனை நோக்கி) ‘‘என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?'' (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்'' என்று கூறினான்.

﴿قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَوْفُورًا﴾

63. (அதற்கு இறைவன், இங்கிருந்து) ‘‘நீ அப்புறப்பட்டு விடு.
அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்'' என்றும்,

﴿وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا﴾

64. ‘‘நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு.
அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி'' என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை.

﴿إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ ۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلًا﴾

65. நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன்.

﴿رَبُّكُمُ الَّذِي يُزْجِي لَكُمُ الْفُلْكَ فِي الْبَحْرِ لِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ ۚ إِنَّهُ كَانَ بِكُمْ رَحِيمًا﴾

66. (மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.

﴿وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُونَ إِلَّا إِيَّاهُ ۖ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ ۚ وَكَانَ الْإِنْسَانُ كَفُورًا﴾

67.
உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

﴿أَفَأَمِنْتُمْ أَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلًا﴾

68.
(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

﴿أَمْ أَمِنْتُمْ أَنْ يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَىٰ فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِنَ الرِّيحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ۙ ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ عَلَيْنَا بِهِ تَبِيعًا﴾

69.
அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

﴿۞ وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا﴾

70. ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம்.
நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.

﴿يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ ۖ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا﴾

71.
ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் (அதே தினசரி குறிப்புப்) புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் நூல் அளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

﴿وَمَنْ كَانَ فِي هَٰذِهِ أَعْمَىٰ فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا﴾

72.
எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தவறி விடுவார்கள்.

﴿وَإِنْ كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ ۖ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا﴾

73.
நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

﴿وَلَوْلَا أَنْ ثَبَّتْنَاكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلًا﴾

74.
உம்மை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.

﴿إِذًا لَأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا﴾

75.
(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.

﴿وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا ۖ وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا﴾

76.
(நபியே! உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள்.
அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

﴿سُنَّةَ مَنْ قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُسُلِنَا ۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا﴾

77. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நமது அந்த வழக்கத்தில் ஒரு மாறுதலையும் நீர் காணமாட்டீர்.

﴿أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا﴾

78.
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வருவீராக. ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வருவீராக. ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது வானவர்கள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.

﴿وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا﴾

79.
(தஹஜ்ஜுது தொழுகை உம் மீது கடமையாக இல்லாவிடினும்) நீர், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வருவீராக! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்' என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உமது இறைவன் உம்மை அமர்த்தலாம்.

﴿وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا﴾

80. அன்றி, ‘‘என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக!

﴿وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا﴾

81. மேலும், ‘‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்'' என்றும் கூறுவீராக!.

﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا﴾

82.
நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திரு குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதையும்) அதிகரிப்பதில்லை.

﴿وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنْسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ ۖ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا﴾

83.
நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை ஒரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்து விடுகிறான்.

﴿قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَىٰ شَاكِلَتِهِ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلًا﴾

84. (ஆகவே, நபியே!) கூறுவீராக: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவற்றையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.

﴿وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ۖ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا﴾

85. (நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் “அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமே தவிர உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)'' என்று கூறுவீராக.

﴿وَلَئِنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِ عَلَيْنَا وَكِيلًا﴾

86. (நபியே!) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்த இந்த குர்ஆனையே (உம்மிடமிருந்து) போக்கிவிடுவோம். பின்னர், (இதை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உமக்கு உதவி செய்ய எவரையும் நீர் காணமாட்டீர்.

﴿إِلَّا رَحْمَةً مِنْ رَبِّكَ ۚ إِنَّ فَضْلَهُ كَانَ عَلَيْكَ كَبِيرًا﴾

87. ஆனால், உமது இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உம் மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது.

﴿قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَىٰ أَنْ يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا﴾

88.
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது.

﴿وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَٰذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ فَأَبَىٰ أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا﴾

89.
இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை நிராகரிக்காமல் இருக்கவில்லை.

﴿وَقَالُوا لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّىٰ تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا﴾

90.
(நபியே!) ‘‘இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண்ணை நீர் ஏற்படுத்தும் வரை நாம் உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

﴿أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا﴾

91.
‘‘அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகளை நீர் ஓடவைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உமக்கு ஆகும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).

﴿أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلًا﴾

92.
‘‘அல்லது நீர் எண்ணுகிற பிரகாரம் வானத்தை பல துண்டுகளாக எங்கள் (தலை) மீது விழவைக்கின்ற வரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நம் (கண்) முன் நீர் கொண்டு வருகின்றவரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).

﴿أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِنْ زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِي السَّمَاءِ وَلَنْ نُؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَقْرَؤُهُ ۗ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنْتُ إِلَّا بَشَرًا رَسُولًا﴾

93.
‘‘அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உமக்கு ஆகும் வரை அல்லது வானத்தின் மீது நீர் ஏறுகின்ற வரை (நாம் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்).
ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீர் இறக்கிவைக்காத வரை நீர் வானத்தில் ஏறியதையும் நாம் நம்பமாட்டோம்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?''

﴿وَمَا مَنَعَ النَّاسَ أَنْ يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَىٰ إِلَّا أَنْ قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَسُولًا﴾

94.
மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில், ‘‘ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதை விட்டும் அவர்களை எதுவும் தடுக்கவில்லை.

﴿قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا﴾

95.
(அதற்கு) நீர் கூறுவீராக: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) வானவர்களே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு வானவரையே (நம்) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உம்மை நம் தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)

﴿قُلْ كَفَىٰ بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ ۚ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا﴾

96.
(இன்னும்,) நீர் கூறுவீராக: ‘‘எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

﴿وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ ۖ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَىٰ وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا ۖ مَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا﴾

97. எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள் தான் நேரான வழியை அடைவார்கள்.
எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவனைத் தவிர்த்து வேறுயாரையும் நீர் காண மாட்டீர்.
மேலும், மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்.

﴿ذَٰلِكَ جَزَاؤُهُمْ بِأَنَّهُمْ كَفَرُوا بِآيَاتِنَا وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا﴾

98.
அவர்கள், நம் வசனங்களை நிராகரித்து விட்டதுடன், ‘‘நாம் (மரணித்து)எலும்புகளாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்.

﴿۞ أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَىٰ أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَا رَيْبَ فِيهِ فَأَبَى الظَّالِمُونَ إِلَّا كُفُورًا﴾

99.
மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதை நிராகரிக்காமலில்லை!

﴿قُلْ لَوْ أَنْتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنْفَاقِ ۚ وَكَانَ الْإِنْسَانُ قَتُورًا﴾

100.
(நபியே!) கூறுவீராக: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகி விடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்.

﴿وَلَقَدْ آتَيْنَا مُوسَىٰ تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ ۖ فَاسْأَلْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُمْ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَأَظُنُّكَ يَا مُوسَىٰ مَسْحُورًا﴾

101. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக.
(மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி, ‘‘மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உம்மை எண்ணுகிறேன்'' என்று கூறினான்.

﴿قَالَ لَقَدْ عَلِمْتَ مَا أَنْزَلَ هَٰؤُلَاءِ إِلَّا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَصَائِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَا فِرْعَوْنُ مَثْبُورًا﴾

102.
அதற்கு மூஸா (அவனை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கிவைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு (காலம்) பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.

﴿فَأَرَادَ أَنْ يَسْتَفِزَّهُمْ مِنَ الْأَرْضِ فَأَغْرَقْنَاهُ وَمَنْ مَعَهُ جَمِيعًا﴾

103. (அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் தன் நாட்டிலிருந்து விரட்டிவிடவே அவன் எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.

﴿وَقُلْنَا مِنْ بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا﴾

104. இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்.

﴿وَبِالْحَقِّ أَنْزَلْنَاهُ وَبِالْحَقِّ نَزَلَ ۗ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا﴾

105. முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது.
(நபியே!) உம்மை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர அனுப்பவில்லை.

﴿وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَىٰ مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنْزِيلًا﴾

106.
(நபியே!) மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்த குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதைச் சிறுகச் சிறுகவும் இறக்கிவைக்கிறோம்.

﴿قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا ۚ إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا﴾

107. (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் (இந்த குர்ஆனை) நம்பிக்கைகொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.
) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம்பணிவார்கள்.

﴿وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا﴾

108. மேலும், (அவர்கள்) ‘‘எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறிவிட்டது'' என்றும் கூறுவார்கள்.

﴿وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا ۩﴾

109. மேலும், அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.

﴿قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَٰنَ ۖ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا﴾

110.
(நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்தபோதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப்பெயர்கள் இருக்கின்றன.
'' (நபியே!) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடிப்பீராக.

﴿وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًا﴾

111. (நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக!

الترجمات والتفاسير لهذه السورة: